வாகன "நெம்பர் பிளேட்டுகளில்' விதிமீறல்




வாகன "நெம்பர் பிளேட்டுகளில்' விதிமீறல் 

வாகனங்களின் பதிவெண் எழுத வேண்டிய "நெம்பர் பிளேட்டுகள்'
சமீபகாலமாக விளம்பரம், அறிவிப்பு பலகையாக மாற்றப்பட்டு வருவதால் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. இதனால் விபத்து ஏற்படுத்தும் வாகனங்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடிக்கிறது. மோட்டார் வாகனங்களை முறைப்படுத்தவும், விபத்தில் சிக்கும் வாகனங்களை கண்டறியவும் போக்குவரத்து விதி மீறலை தடுத்திட வாகனங்களுக்கு பதிவெண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு வாகனத்திற்கும் முன், பின் பதிவெண் எழுத வேண்டும். சொந்த வாகனத்தில் வெள்ளை நிற நெம்பர் பிளேட்டுகளில் கருப்பு நிறத்திலும், வாடகை வாகனத்தில் மஞ்சள் நிற நெம்பர் பிளேட்டில் கருப்பு நிறத்தில் எழுத வேண்டும். இந்த பதிவெண்களை சாலைகளில் குறைந்தபட்சம் 10 மீட்டர் இடைவெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெளிவாக தெரியும் வகையில் எழுத வேண்டும் என்பதற்காக நெம்பர் பிளேட் அளவு, எழுத்தின் அளவு, கனம் மற்றும் இரு எண்களுக்கு இடையே உள்ள இடைவெளி எவ்வளவு இருக்க வேண்டும் என ( விவரம்: பெட்டி செய்தியில்) வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் இருசக்கர வாகனங்களில் பதிவெண்களை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப எழுதி வைத்துள்ளனர். வட்டார போக்குவரத்து அலுவலக குறியீடு (டி.என்.) சிறியதாகவும், பதிவெண்ணில் நான்கு இலக்க எண்களில் "நியூமராலஜி'படி ஏதேனும் ஒரு எண்ணை பெரிதாகவும், மற்ற எண்களை சிறியதாக எழுதியுள்ளனர். சிலர் தங்களை தமிழ் ஆர்வலர்களாக காட்டிக் கொள்ள குறியீடு எண் மற்றும் பதிவெண் அனைத்தையும் தூய தமிழில் எழுதி வைத்துள்ளனர். இன்னும் ரத்தம் சொட்டும் கத்தி, வீச்சரிவாள், துப்பாக்கி போன்ற ஆயுதங்களையும் வரைந்து வைத்துள்ளனர். இதுபோன்ற வாகனங்கள் போக்குவரத்து விதிகளை மீறிச் செல்லும் போதோ அல்லது விபத்து ஏற்படுத்திச் சென்றாலோ பதிவெண்ணை கண்டறிவதில் சிரமம் ஏற்படுகிறது.
இன்னும் பலர் வாகனங்களின் நெம்பர் பிளேட்டுகளை விளம்பரம், அறிவிப்பு பலகையாகவும், சிலர் பெயர் பலகையாகவும் பயன்படுத்தி வருகின்றனர். அரசு துறைகளில் பணிபுரிபவர்கள் பலர் தங்களது வாகனங்களின் நெம்பர் பிளேட்டுகளில் தாங்கள் பணிபுரியும் அரசு துறையின் "போலீஸ்", "நீதித்துறை' மின் வாரியம், நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்புத்துறை, வருவாய் துறை, சுகாதரம், வனத்துறை, கல்வித்துறை என பெரிதாகவும், பதிவெண்ணை சிறிதாகவும் எழுதி வைத்துள்ளனர். சிலர் கட்சியின் சின்னத்தையும், குடும்ப உறுப்பினர்களின் படங்கள், சுவாமி படங்களை ஒட்டியுள்ளனர். சிலர் "பிரஸ்' (பத்திரிகையாளர்) என எழுதி வைத்துள்ளனர். இன்னும் சிலர் ஒருபடி மேலாக சோதனை செய்யும் போலீசாரை மிரட்டும் தொணியில் நெம்பர் பிளேட்டுகளில் அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் படங்களையும் வைத்துள்ளனர். இவ்வாறு அரசு துறைகளின் பெயர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் ஒட்டிய வாகனங்களை போலீசார் நிறுத்தி சோதனை செய்ய அஞ்சுகின்றனர். இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு திருடர்கள் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் ஏதேனும் அரசு துறை பெயர் (குறிப்பாக "போலீஸ்') அல்லது அரசியல் கட்சி தலைவரின் பட ஸ்டிக்கரை நெம்பர் பிளேட்டில் ஒட்டிவிட்டு எளிதாக தப்பிச் செல்கின்றனர். வழிப்பறியில் ஈடுபடுபவர்கள், வாகனத்திற்கு ஆவணங்கள் இல்லாதவர்களும் இதே முறையை பின்பற்றுகின்றனர். இதன் காரணமாக மாவட்டத்தில் பெரும்பாலான மோட்டார் சைக்கிள்களில் அரசு துறைகளின் (அரசு வாகனங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்) பெயர்கள் எழுதப்பட்டுள்ளதால் போலீசார் வாகன தணிக்கை செய்யவே தயங்குகின்றனர்.

Share:

No comments:

Post a Comment

Visited

FIND ME ON TWITTER

POSTS FROM FACEBOOK

Recent Posts